இந்த நூற்றாண்டின் மிக மோசமான மோசடி கொள்கலன் விடுவிப்பாகும்! சாகர காரியவசம்
இந்த நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான மோசடியாக பரிசோதனை செய்யாது கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமையை குறிப்பிட முடியும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி மூலம் ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நூற்றாண்டில் இடம்பெற்ற மிக மோசமான மோசடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடி மதிப்பீடு
ஒரு தொகை கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைக்கும் உட்படுத்தாது விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்களில் காணப்பட்ட பொருட்களின் அடிப்படையில் இந்த மோசடி மதிப்பீடு செய்யப்பட முடியாத பாரிய மோசடியாக இருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரை சுத்தகரிப்பதற்கு பயன்படுத்தும் இரசாயனத்தில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் காணப்பட்டதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ சானக்க குற்றம் சுமத்தியிருந்தார் எனவும் அவ்வாறான பொருட்கள் எவ்வாறு பரிசோதனையின்றி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன என சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொள்கலன்கள் பரிசோதனை
இவ்வாறு கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் செயற்படும் வர்த்தகர்கள் யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கொள்கலன்களின் உரிமையாளர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை கண்டுபிடிக்க இந்த அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பாரிய மோசடியுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.