வெள்ள நிவாரணத்தில் பக்கச்சார்பு : அரசாங்க அதிபருக்கு மனு கொடுத்த கிராம மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையில் முறைகேடு காணப்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையிட்டுள்ளார்கள்.
இன்று(12.12.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் கிளீன் சிறீலங்கா திட்டத்தில் நடமாடும் சேவை ஒன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடற்தொழிலுக்கு செல்லமுடியாத நிலை
இந்த நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ள நிலையில் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் கிராம சேவையாளர் சரியான தெரிவு நடைபெறவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு தங்கள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் வெள்ளத்தினால் அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை.
கள்ளப்பாடு தெற்கில் 610 குடும்பங்கள் காணப்படும் நிலையில் 65 குடும்பங்களுக்கே கிராம அலுவலகர் அரசாங்கத்தின் நிவாரணத்திற்கு பதிந்துள்ளார்.
கிராமத்தில் 150 குடும்பம் வரையில் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டு உறவுகளால் வழங்கப்பட்ட உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த மக்கள் ஒருமாதமாக கடற்தொழிலுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை உள்வாங்குமாறு கோரி மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை ஒன்றினை கையளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri