மன்னாரில் சிறப்பாக இடம்பெற்று வரும் பொசன் தின நிகழ்வுகள்
கௌதம புத்தரின்,பிறப்பு,ஞானம் பெறல் மற்றும் பரி நிர்வானத்தை நினைவு கூறும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான பொசன் தின நிகழ்வு நேற்று (21) மன்னாரில் 'மன்னார் பொசன் சமாதான வலயம்' எனும் தொனிப்பொருளில் சர்வமதங்களை உள்ளடக்கியதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் - தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு மற்றும் பொலிஸ், கடற்படை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பொசன் தின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை(21) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் பொது கட்டளை தளபதி எம்.ரி.ஐ.மகா லேகம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மற்றும் சர்வ மத தலைவர்கள், இணைந்து பொசன் தின நிகழ்வுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
பொசன் நிகழ்வுகள்
இதன் போது இராணுவம்,பொலிஸ்,கடற்படை உயர் அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மன்னார் பொசன் சமாதான வலயம் எனும் தொனிப்பொருளில் சர்வ மதங்களை உள்ளடக்கியதாக குறித்த பொசன் நிகழ்வுகள் அமைந்திருந்தது.
இதன் போது பொசன் பாடல்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் இசைக்கப்பட்டது. பல விதமான பொசன் கூடுகள் அழங்கரிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் விசேட அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் இன்று சனிக்கிழமை (22) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) ஆகிய இரு தினங்களும் இரவு 7 மணி முதல் குறித்த பகுதியில் பொசன் நிகழ்வுகள் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |