ஐரோப்பிய எல்லையில் போர்ப் பதற்றம் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலாத்துறை எதிர்பார்த்த அளவு பாதிக்கப்படவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளின் வருகையில் எந்த குறைவும் ஏற்படவில்லை என அதன் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
யுத்தம் தொடருமானால் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் கூட இலங்கைக்கு வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.
தினசரி ஒரு சுற்றுலா பயணி 150 முதல் 200 டொலர்களை நாட்டில் செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 64,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 26,597 பேர் ரஷ்யர்களாகும்.
இந்த காலகட்டத்தில் ரஷ்யா நாட்டில் இருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர். பட்டியலில் உக்ரைன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த எண்ணிக்கை 12,979 ஆகும்.
உக்ரேனுக்கு அருகில் உள்ள போலந்து மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.