இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்
இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாக லெபனான் அறிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் யூசுப் ராகி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், எல்லையில் நிரந்தர போர்நிறுத்தத்தை எட்டவும், லெபனான் பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக வெளியேற்றவும் இஸ்ரேலுடன் "நேரடி பேச்சுவார்த்தையில்" ஈடுபட பெய்ரூட் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது இந்த முக்கிய முடிவை அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடலின் போது, லெபனான் எல்லைகளின் இறையாண்மையை அங்கீகரிப்பதாகவும், லெபனானின் எந்தவொரு பகுதியையும் இணைக்கும் முயற்சியை போலந்து திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும் சிகோர்ஸ்கி உறுதி அளித்தார்.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் பின்னணியில், கடந்த மார்ச் 2 முதல் லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ம் திகதி லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
எனினும், இந்த நேரடி பேச்சுவார்த்தை முடிவை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நேற்று நிராகரித்ததோடு, இத்தகைய பேச்சுவார்த்தைகள் நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.