ஆரம்பமானது வெற்றிக்கான கொண்டாட்டங்கள்(Video)
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளதை யாழ்.மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
இதேவேளை, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அம்பாறை - கல்முனை
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அம்பாறை - கல்முனை பிரதான வீதியில் இன்று(09) சீன வெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினை கல்முனை சேர்ந்த இளம் வர்த்தகர்கள் இணைந்து கல்முனை நகரின் முக்கிய சந்திகளில் சீன வெடி கட்டுக்களை வெடிக்க வைத்து ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோசம் எழுப்பியுள்ளனர்.
செய்தி-பாறுக் ஷிஹான்
வவுனியா
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலையடுத்து வவுனியா நகரில் இன்று (09) மாலை இளைஞர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி-திலீபன்
முல்லைத்தீவு
ஜனாதிபதி மாளிகைக்கு திரண்ட மக்களின் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தியுள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர்,“இலங்கை நாட்டில் அதிகப்படியான 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி அதே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் இன்று பேசுபொருளாக அனைத்து மக்களிடமும் காணப்படுகின்றது. இலங்கை நாட்டில் மக்கள் இறுக்கமான பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் வீறுகொண்டு எழுந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவிவிலகுமாறு கோரியுள்ளார்கள்.
மக்களின் எழுச்சியின் வடிவம் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆதாரவினை கொடுத்துள்ளதுடன் அந்த மகிழ்சியினையும் சந்தோசத்தினையும் வெளிப்படுத்துவதற்காக” தெரிவித்துள்ளார்
செய்தி-கீதன்