விபத்தில் இறந்த யாசகர் கதிரேசன் பாலமுருகனின் பொதியில் பெரும் தொகை பணம்!
விபத்தொன்றில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் பொதியில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பணம் வைப்புச் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்த நிலையில் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த நபர், உடப்பு கிராமத்தை சேர்ந்த 49 வயதான கதிரேசன் பாலமுருகன் என்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யாசகர் கடந்த 5 ஆம் திகதி புத்தளம்- சிலாபம் வீதியில் ஆனவிழுந்தாவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனவிழுந்தவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யாசகர் நீண்டகாலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
மரணமடைந்த பின் அவரது பொதியை சோதனையிட்ட போது, மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணம் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் மேலும் 47 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துள்ள வங்கிக்கணக்கு புத்தகங்கள் இருந்தன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாசகரின் இறுதிச்சடங்கு குறித்து தற்போது தீர்மானிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




