பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய வெடிப்பு சம்பவம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
பிரித்தானியாவின் பெட்ஃபோர்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மூவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நகரின் ரெட்வுட் குரோவ் பகுதியில் உள்ளுர் நேரப்படி 09:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெட்ஃபோர்ட்ஷைர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிழரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தீயில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்த நபர்
"மிகவும் துரதிர்ஷ்டவசமாக, இன்று வெடிப்பில் குறைந்தது ஒரு நபர் உயிரிழந்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்," என்று பெட்ஃபோர்ட்ஷையர் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் ஜான் மர்பி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சம்பவ இடத்தைத் தொடர்ந்து தேடுவதால் வரும் நாட்களில் மேலும் உயிரிழப்புகள் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் தீயணைப்பு சேவையைச் சேர்ந்த எனது சக ஊழியர் அடையாளம் காட்டியது போல் இன்றும் பலர் காயமடைந்துள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.
வெடிப்புச் சம்பவத்தை ஒட்டிய ஒரு மேல் தளத்தில் (மூன்றாவது தளம்) வசிப்பவர்கள் தீயில் இருந்து தப்பிக்க இரண்டு பேர் ஜன்னல்களில் இருந்து குதிப்பதைக் கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வரையில் தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் புகை சுவாசத்தால் பாதிக்கப்பட்டு பெட்ஃபோர்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மூன்றாவது நபருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஆடன்புரூக் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.