பாடசாலை தொடங்கும் போது மாணவர்களுடைய செயற்பாடு தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்! சி.யமுனாநந்தா
பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்களுடைய உளவிருத்தி, செயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகள் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இது மிகவும் அவசியமான முயற்சியாகும். மாணவர்களின் கல்வி கடந்த வருடம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
எனவே அவர்களுடைய கல்வியை மீண்டும் செயற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் ஓரளவு தணிந்துள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு பாடசாலைகளை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்காக மாணவர்களும் பெற்றோர்களும், பாடசாலை சமூகமும் முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் மற்றும் கை கழுவுவது தொடர்பான முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.
அடுத்ததாகப் பாடசாலைகளுக்குக் காய்ச்சல், தொண்டை நோ, இருமல் உள்ளவர்கள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
கல்வி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது கொரோனா காலத்தில் இழந்த கற்றல் செயற்பாடு மீட்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக சில பின் தங்கிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகும் தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது.
இது நீண்டகால நோக்கில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் எதிர் காலத்தில் அவர்களுடைய வேலை வாய்ப்பு, குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் சிறு வயதிலே தொழிலுக்குச் செல்லும் தன்மை சில இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் சிலர் தமது பாடப்பரப்பு முடியாத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்றாமல் விடலாம் அல்லது குறைந்த பெறுபேற்றினை எடுக்க முடியும்.
எனவே இந்த மாணவர்களுக்குக் குறைந்தது நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு முற்பரீட்சை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு செயற்படுவதன் மூலம் பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் தவிர்க்கப்படும். பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடை விலகும் போது சமூகத்தில் ஏற்படுகின்ற சமூகத்தாக்கங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும்.
அடுத்ததாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கான விசேட கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம். அவ்வாறு செய்யாவிடின் சமூகத்தில் ஒரு வெற்றிடம் காணப்படும். கொரோனா காலத்தில் zoom தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பல மாணவர்கள் கல்விச்செயற்பாட்டை முன்னெடுத்தார்கள்.
ஆனால், வசதி குறைந்த பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் zoom தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக நகரப்பகுதி மாணவர்கள் zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி செயற்பாட்டை முன்னெடுத்தார்கள்.
எனினும், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத மாணவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் வீடுகளில் தமது நேரத்தைச் செலவிட்டுள்ளார்கள்.
அவர்களுடைய உளவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். எனவே மாணவர்களைக் குழு செயற்பாட்டில் ஈடுபடுவதைப் பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக கற்றல் செயற்பாடு விளையாட்டாக இருக்கலாம்.
மாணவர்கள் குழுவாக இயங்கிச் செயற்படுதல் வேண்டும். அடுத்ததாக விளையாட்டுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட இரண்டு மடங்காக நேரத்தினை விளையாட்டுக்கு ஒதுக்குவதன் மூலம் அவர்களுடைய உளவிருத்தி செயற்பாட்டினை அதிகரிக்க முடியும்.
மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய உள சமூக தாக்கங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் அதிக மாணவர்களின் பெற்றோர்கள் வேலை வாய்ப்பினை இழந்திருப்பார்கள். அவ்வாறான நிலையில், பாடசாலைகள் மாணவர்கள் மீண்டும் வரும்போது அவர்களுடைய உளவிருத்தி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டும். அத்தோடு பாடசாலைகளில் மாணவர்களுக்குரிய பாட விதானத்தினை முடிப்பதற்கு மட்டும் நேரத்தைச் செலவழிக்காது பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீண்ட காலமாக வீடுகளிலிருந்து மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு வந்திருக்கின்றார்கள். எனவே அவர்களுடைய ஒழுக்க செயற்பாடுகள் தொடர்பிலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.