7ஆம் திகதிக்கு எழுச்சி கொள்கிறது மட்டக்களப்பு(Photos)
இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்து சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடணப்படுத்தி வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் தயாராகி வருகிறது.
எழுச்சிப் பேரணி
நாளைய தினம் வட மாகாணத்தின் யாழ்பாணத்தில் இருந்து ஆரம்பமாகும் எழுச்சிப் பேரணி எதிர்வரும் 7 ம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி கூட்டத்துடன் நிறைவு பெற உள்ளது.
பொங்கு தமிழ் நிகழ்வுக்கு பின்னர் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு தமிழர் தாயக மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி சர்வதேச சமூகத்தை திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான பிரகடன நிகழ்வு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள்,பொது அமைப்புகள்,கிராம அமைப்புக்கள் என பலரும் இணைந்து நாளைய போராட்டத்திற்கான பதாகைகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், சிவப்பு மஞ்சள் நிற கொடிகளை பறக்க விடுதல், கருப்பு கொடிகளை கொடிகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் மிகவும் எழுச்சியுடன் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மண்ணில் நடைபெற உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன் நிகழ்வில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு பங்கு பற்றி தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் வலியுறுத்தி கூற தயாராகி வருகின்றனர்.






