இலங்கையின் கல்வி வலய தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 17 ஆவது இடம்
க.பொ.த.சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் கல்வி வலய தரப்படுத்தலில் 45 வது வலயமாகவிருந்த மட்டக்களப்பு கல்வி வலயம் 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 17வது நிலைக்கு உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றவேளையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில், தற்போது பரீட்சை திணைக்களம் பரீட்சையின் பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களில் 17வது இடம்
அந்த வகையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களில் 79.38 என்ற சித்தி வீதத்தினைப்பெற்று இலங்கையில் 17வது இடத்தினைப்பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சை சித்தி வீத பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சித்தி வீதமானது 6.48 என்ற வீத அதிகரிப்பினை காட்டுவதுடன், 2019 ஆம் ஆண்டு நாங்கள் அகில இலங்கையில் 45வது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த நிலையிலும் மாணவர்கள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இலங்கையில் முதல் 20 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பினை பெற்றுத்தந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இந்த விகிதாசார அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தினைப்பெற்றுள்ளது.
இந்த மாணவர்களை அக்கரையுடன் வழிநடத்தி கற்பித்த அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பரீட்சைகளை மேற்கொண்டு பெறுபேறுகளை பெறுவதற்கு உழைத்த வலய கல்வி அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.



