தமிழினத்தை அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும்: சதாசிவம் வியாழேந்திரன்
தமிழினத்தை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(19.01.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழர்களின் இருப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. இதற்கு காரணம் 75 வருடமாக தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை பொய்கூறி ஏமாற்றிவந்தமையே ஆகும்.
இன்று தமிழர்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
கிழக்கில் தமிழினத்தை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும். தமிழர்களை யாரும் அழிக்கவில்லை.
இந்த தமிழ் அரசியல் தலைமைகளே பொய்களை கூறி தமிழ் மக்களை அழித்துவந்தனர்” என தெரிவித்துள்ளார்.
75 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
இந்த இரண்டு மாடிக்கட்டிடமானது லண்டனில் உள்ள ஈழப்பதீஸ்வரர் ஆலயம் மற்றும் விருட்சம் அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் லண்டனில் உள்ள ஈழப்பதீஸ்வரர் ஆலயம் மற்றும் விருட்சம் அமைப்பு ஆகியவற்றிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்காக 75 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் வி.எஸ்.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன்,பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.சஜீவன், லண்டன் பதீஸ்வரர் ஆலயத்தின் இணைப்பாளர் எல்.அனோஜன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் மிகவும் பின்தங்கிய பகுதியிலுள்ள பாடசாலையான காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் நிலவும் பாரியளவிலான பௌதீக பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

