உலகில் எங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் செதுக்கிய சிவன் அரண்மனை (video)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சிவபூமி திருமந்திர அரண்மனை அமைக்கப்பட்டு அதற்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(23.03.2023) நடைபெற்றுள்ளது.
இந்துக்களின் மிக முக்கியத்தும் வாய்ந்த நூலாகவும் தெய்வீக நூலாகவும் கருதப்படும் திருமந்திரத்தின் 3000 பாடல்களை கருங்கல்லில் செதுக்கி இந்த சிவபூமி திருமந்திர அரண்மனையாக அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றியில் இந்த அரண்மனை நிறுவப்பட்டுள்ளது.
கருங்கல்லி்ல் செதுக்கப்பட்ட திருமந்திரம்
இலங்கையில் முதன் முதலாக கருங்கற்களில் பொறிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த திருமந்திரம் மற்றும் 108 சிவலிங்கம் கொண்ட சிவபூமி திருமந்திர அரண்மனையில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனின் தலைமையில் நடைபெற்றது.
உலகில் எங்கும் இல்லாத வகையில் 3000 திருமந்திரங்களையும் கருங்கல்லில் செதுக்கப்பட்டு இந்த அரண்மனை அமைக்கப்பட்டுள்ளமையானது ஒரு வரலாற்று நிகழ்வாகவே நோக்கப்படுகின்றது.
அரண்மனை ஆலயத்திடம் ஒப்படைப்பு
இன்றைய தினம் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பெருமளவானோர் இந்த அரண்மனையில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அரண்மனையின் கருவறையில் முகலிங்கம் மூலமூர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்தின் முகவாயிலில் ரதத்தில் திருமூலப்பெருமானும் சிவபெருமானும் எழுந்தருளியிருப்பதையும் காணமுடிகின்றது.
நாளை காலை அரண்மனையின் கும்பாபிசேகம் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் அரண்மனையினை உத்தியோகபூர்வமாக ஆலயத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.