மட்டக்களப்பை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
மட்டக்களப்பில், இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான இன்றைய வழக்கில் பிரதான சந்தேக நபர் மூவரில் மனைவி மற்றும் சகோதரனுக்கு எதிர்வரும் 2026.03.30ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபரில் முதலாமவரை தொடர்ந்து மேலும் 03 நாட்களுக்கு பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயக்கமருந்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 07 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நகைக்கடை வியாபாரிகள் இருவருக்கும் எதிர்வரும் 2026.04.02ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச்சம்பங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மயக்கமடைய செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தொகுதி மருந்துகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடத்தப்பட்ட பெண் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
தொடரும் விசாரணை
இந்த கிணற்றிலிருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் விசேட விசாரணையினை முன்னெடுக்கும் வகையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் விசேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இது தொடர்பில் வவுணதீவு காஞ்சிரங்குடா பகுதியினைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் இது தொடர்பிலான விசாரணைகளும் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுவந்தன.
இந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களின் வீட்டின் காணிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மயக்கமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலித்தின் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு மயக்கமருந்து குப்பிகள், மயக்க குளிசைகள் மற்றும் விசிறும் மயக்கமருந்து போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொக்கட்டிச்சோலையினை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மயக்கமருந்து போத்தல் ஒன்றை வழங்கியமை தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்த நிலையில் அவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் புதைக்கப்பட்ட நிலையிலிருந்த மயக்கமருந்து போத்தலும் மீட்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri