மட்டக்களப்பு - மண்முனையில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு (Photos)
சர்வதேச முதியோர் தினம் மற்றும் சர்வதேச சிறுவர் தினங்கள் இன்றாகும். இந்த ஆண்டு சர்வதேச முதியோர் தினம் ஆரோக்கியமான அகவையினை நோக்கி, முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய தொனிப்பொருளைக்கொண்டு அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினம் இன்று (01.10.2023) நடைபெற்றது.
முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்
கோட்டைமுனை விஸ்வகர்மா கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு கோட்டைமுனை சிரேஸ்ட
பிரஜைகள் சங்கத்தின் தலைவர் சி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான அங்கத்துவ அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இதன்போது சிறுவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ப.இராஜ்மோகன் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி நிலக்சி நிரூசன், கிராம சேவையாளர் திருமதி பிரியதர்சினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சர்வதேச முதியோர் தினம் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











