மட்டக்களப்பு பகுதியில் முற்றாக தீக்கிரையாகிய வீடு - தெய்வாதீனமாக உயிர் தப்பிய வீட்டார்
மட்டக்களப்பு - செங்கலடி சந்தை பகுதியில் மின்சார கசிவு காரணமாக வீடொன்று முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.
இந்த விபத்தானது இன்று (15.08.2026) காலையில் இடம்பெற்றுள்ளது.
மின்சாரக் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இன்று காலை வேளையில் குறித்த வீட்டின் மின் ஒழுக்கு காரணமாகவே தீ மூண்டுள்ளது.
உடமைகளை இழந்த வீட்டார்
குறுகிய நேரத்திற்குள் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியதால், வீட்டினுள் இருந்தவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
தீயின் வீரியம் அதிகமாக இருந்தபோதிலும், வீட்டின் உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட வேளை அருகாமையிலிருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடனடியாக செயற்பட்டு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆயினும், இந்தத் தீ விபத்தின் காரணமாக வீட்டின் கூரை, மரத்தளபாடங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடமைகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதனால் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக மின் ஒழுக்கு காரணமான விபத்துக்கள் அதிகரித்து வருவதால், மின்சாரப் பயன்பாட்டின் போது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


