மஞ்சள் செய்கையில் ஆர்வம் காட்டும் மட்டக்களப்பு விவசாயிகள்
மஞ்சள் செய்கையை மேற்கொண்டு அதிலிருந்து அதிக வருமானம் பெறவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம் என றாணமடு கிராமத்தில் மஞ்சள் செய்கையில் ஈடுபட்டு வரும் க.நல்லையா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
''நான் ஒன்றரைப்பங்கு நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளேன். மஞ்சள் செய்கையில் குறைந்த செலவில் அதிகளவு இலாபத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
மஞ்சள் செய்கைக்கு இயற்கையாகவே கிடைக்கும் வைக்கோல் மற்றும் மாட்டெரு ஆகிய இரு இயற்கைப் பொருட்களை மாத்திரம் தான் உரங்களாகப் பாவிப்பதுண்டு. வேறு ஏதாவது இரசாயனங்கள் பாவிப்பது கிடையாது.
மஞ்சள் செய்கையை இலங்கையின் வேறு மாவட்டங்களிலும், வெளி நாடுகளிலும் செய்கின்றார்கள். மாறாக எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்படுவது மிக மிகக் குறைவாகும்.
அதிக வருமானமீட்டக்கூடிய இப்பயிர் செய்கையை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிட்டால் அதிகளவு இலாபத்தையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
எனவே முயற்சியுடையோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்துபட்ட அளவில் மஞ்சள் பயிர்செய்கையை மேற்கொள்வதற்கு முன்வந்தால் தத்தமது வருமானங்களை அதிகரிக்கச் செய்வதோடு தொடர்ந்து வறுமை வறுமை எனச் சொல்லிக்கொள்ள வேண்டிய தேவையும் எழாது.
தற்போதைய நிலையில் இரசாயனம் கலந்த கிருமிநாசினிகளைப் பயிர்களுக்கு விசிறுவதனால் அதில் விளைகின்ற பொருட்களும் நஞ்சைச் சேமித்து வைக்கின்றது. இரசாயனப் பாவனையால் மனிதர்களுக்கும் நேரடி தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இதனால் பெரும் பாதிப்புக்கள் நேரடியாகவே ஏற்படுவதை நாம் அவதானிக்கின்றோம். இந்நிலையில் குறைந்த நிலப்பரப்பில் குறைந்த முதலீட்டில் கூடிய வருமானம் பெறும் வாழ்வாதாரம் தொழிலாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.
அனைவரும் எம்மைப்போன்று எமது பகுதியுள்ள ஏனையோர்களும், இவ்வாறு மஞ்சள் செய்கையை மேற்கொண்டு அதிலிருந்து அதிக வருமானம் பெறவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.
அவ்வாறு முன்வருபவர்களுக்கு எம்மால் மஞ்சள் விதைகள் வழங்க முடியும், நாம் செய்வதை முன்னுதாரணமாகக் கொண்டு எமது பகுதியிலுள்ள அனைவரும் மஞ்சள் பயிரிடுவதற்கு முன்வர வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி தெரிவிக்கையில்,
''கூடிய நிலப்பரப்பில் அதிகளவு செலவு செய்து பூச்சித்தாக்கம், யானைத்தாக்கம், வெள்ளம், வறட்சி, உள்ளிட்ட பலவற்றிற்கும் முகம் கொடுத்து, இறுதியில் குறைந்த வருமானம் பெறும் விவசாயச் செய்கை அல்லது சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் மலையகத்தில், அல்லது வெளிநாடுகளில் மேற்கொள்வது போன்றதான மஞ்சள் பயிற் செய்கையிலும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
நிலைமை அறிந்த விவசாயிகள், சிறு சிறு தோட்டங்களாகவும், வீடுகளிலும், வயல்களிலும், இவ்வாறு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைப் புறக்கிராமங்களான றாணமடு, பூச்சுக்கூடு, 25ஆம் கெலனி, மாலையர்கட்டு, சின்னவத்தை, உள்ளிட்ட பல இடங்களிலுள்ள மக்கள் மஞ்சள் பயிர் செய்கையில் ஆர்வம் காட்டிவருவதை அவதானிக்க முடிகின்றது.
மஞ்சள் பயிரிட்டு 8தொடக்கம் 9மாதங்களில் அறுவடை செய்யப்படுகின்றது. சுமாராக ஒரு கிலோ விதை மஞ்சள் 200தொடக்கம் 500ரூபாவாகும். ஓன்றரைப் பங்கு நிலத்தில் 25கிலோகிராம் மஞ்சள் நடப்படுகின்றன. அதற்கு இயற்கையாகவே கிடைக்கின்ற மாட்டெரு, மற்றும் வைக்கோல், நீர் இட்டுப் பராமரித்து வருகின்ற நிலையில் 8தொடக்கம் 9மாதங்கள் கழிந்த பின்னர் அறுவடை செய்தால் சுமார் 10மூடை (அதாவது 500கிலோகிராம் பச்சை மஞ்சள் அறுவடை செய்யலாம்).
ஒரு கிலோகிராம் பச்சை மஞ்சள் 500ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே 8தொடக்கும் 9மாதங்களுக்குள் ஒன்றரைப் பங்கு நிலப்பரப்பில் சுமார் 15000ரூபா செலவு செய்து 250000ரூபா வருமானம் பெறலாம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடை செய்த மஞ்சளை இதுவரையில் அவ்வாறே பச்சை மஞ்சளாகவே விற்பனை செய்து வரும் மக்கள் அதனை மேலும் பதப்படுத்தி பாவனைக்கு உகந்த முறையில் மாற்றினால் தற்போது பெறும் வருமானத்தை விட மூன்று மடங்கு வருமானம் ஈட்டமுடியும் எனவும், குறிப்பாக 6கிலோகிராம் பச்சை மஞ்சளைப் பதப்படுத்தினால் 1கிலோகிராம் பாவனை செய்யும் உலர்ந்த கட்டி மஞ்சள் பெறலாம் எனவும் அதற்குரிய தொழில்நுட்பம், தம்மிடம் இல்லையாதலால் அறுவடை செய்தவுடனேயே அவ்வாறே அம்பாறைப் பகுதியிலிருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மஞ்சள் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
கடந்த வருடம் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் எமது பகுதியில் மஞ்சள் பயிரிடுவதற்கான உதவிகள் சில வழங்கப்பட்டன. இவற்றினை விட விவசாயிகளும், தங்களது சுய முயற்சியில் மஞ்சள் பயிர் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அரசாங்கத்தால் உழுந்து, இஞ்சி, பயறு மற்றும் இஞ்சி விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மஞ்சள் பயிரிடுவதற்குரிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை அனுப்பியுள்ளோம். அவை கிடைக்கப் பெற்றதும் மேலும் மஞ்சள் பயிர் செய்கையை மேம்படும் என நினைக்கின்றேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகஸ்த்தர் நர்த்தனா குகதாசன் தெரிவிக்கையில்,
''மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் மஞ்சள் பயிர் செய்கையை மேம்படுத்தி ஊக்குவித்தும் வருகின்றோம். 20கிலோகிராமிற்கு மேல் நடும் விவசாயி ஒருவருக்கு நாம் 3000ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையை வழங்கி வருகின்றோம். கடந்த வருடம் இவ்வாறு மாவட்டத்தில் 5இலட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.
தற்போதைய நிலையில் மாவட்டத்தில் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், உள்ளிட்ட பல பகுதிகளிலுமாக சுமார் 5கெக்டயர் அளவில் மஞ்சள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அறுவடைக்குப் பின்னர் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்படும் விடையங்களுக்காக மாவட்டத்தில் 2தொழில்நுட்ப பிரிவுகளை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் குறைந்த நிலப்பரப்பில் கூடிய வருமானத்தை ஈட்டக்கூடிய இம்மஞ்சள் செய்கையை மாவட்டத்திலுள்ள ஏனைய விவசாயிகளும் மேற்கொள்ளக்கூடிய வகையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே நர்த்தனாவின் கருத்து அவ்வாறு அமைகின்ற போதிலும், காலத்தின் வேவையறிந்து ஏற்றுமதிப் பயிராகக், காணப்படும், மஞ்சள் செய்கையை மட்டக்களப்பிலும் மேற்கொண்டு வரும் விவசாயிகளை இனம்கண்டு அவர்களுக்கு வேண்டிய மேலதிக உதவிகளையும், வழிவகைகளையும் மேற்கொண்டு வழங்க வேண்டியது துறைசார்தோரின் தலையாய கடமையாகும்.
அரசினால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உந்து
சக்தியளிப்பதுபோல், காலநிலைக்கு ஏற்ப தகுந்த காலத்தில் குறுகிய நிலப்பரப்பில்
மேற்கொள்ளப்படும் மஞ்சள் போன்ற பயிரினங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு
வேண்டிய உதவிகளை நல்க மக்கள் பிரதிநிதிகளும், செயற்பாட்டு ரீதியாக அதிகாரிகளும்
உடன் திட்ட வரைபுகளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைகளுக்குக் கொண்டு வரப்படும்
பட்சத்திலேயே இன்னும் பல விவசாயிகள் இவ்வாறு மஞ்சள் போன்ற ஏற்றுமதிப் பயிர்களை
நட்டு தங்களது வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வரமுடியும் என எதிர்பார்க்கின்றனர்.








