மட்டக்களப்பில் மகளுக்கு சித்திரவதை கொடுத்த 24 வயது தந்தை கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில், போதைப்பொருள் வைத்திருந்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய இளைஞர் ஒருவர் 2300 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுக்கு சித்திரவதை
சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 8 மணியளவில், குறித்த நபர் தனது ஒரு வயது மகளுக்கு சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

அதாவது, தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு தீர்த்தியுள்ளார்.
போதைக்கு அடிமையான அவர் குழந்தையை துன்புறுத்தியதை கண்டு மனைவி மன உளைச்சலில் தவறான முடிவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், பின்னர் அயலவர்கள் தலையிட்டு அவரை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பின்னர் அவர்கள் சிறுவர் மற்றும் மகளிர் அவசர உதவி இலக்கம் 1929 க்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் த. ரஜினிகாந்த் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதையடுத்து குழந்தையை சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.