பதில் பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடியது எனசங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு தடுக்க, பொலிஸார் மற்றும் சிறை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான சிறந்த வழி சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதன் மூலம் மட்டுமே சாத்தியம் எனவும், சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக, பதில் பொலிஸ் மா அதிபர் உடனடியாக பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சில தசாப்தங்களாகவே நீடித்து வருவதாகவும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மந்த கதியியில் இடம்பெறுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.