"கேட்டாபயவை வீட்டுக்கு விரட்டியடித்த பசிலின் இலக்கு! அதிகாரம் இல்லாத ரணில்"
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையுடன் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது பதவி வகிக்கிறார், ஆகவே அவர் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட கூடாது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைய காணி அதிகாரம் மற்றும் 9 மாகாணங்களுக்கும் பிரத்தியேக பொலிஸ் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் மாத்திரம் தற்போது மிகுதியாகவுள்ளது. மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கும் போது இலங்கை இயல்பாகவே சமஷ்டியாட்சி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும்.
69 இலட்ச மக்கள் சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். கோட்டாபய ராஜபக்ச சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக 'பஷில் ராஜபக்ச இலக்கு' கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் நாட்டு மக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபயவை விரட்டியடித்தார்கள்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்டார்.
சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடப்படவில்லை.
அரசியல் திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே மக்கள் பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணையுடன் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது பதவி வகிக்கிறார், ஆகவே அவர் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட கூடாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்திய காலத்தில் இருந்து பதவி வகித்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, ஏனெனில் இதன் பாரதூரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் பிரதிநியல்ல என்பதால் இதன் பாரதூர தன்மையை அறிந்துக் கொள்ளும் தேவை அவருக்கு இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இவர் கடந்த ஆறு மாத காலமாக எதனையும் செய்யவில்லை. பேச்சளவில் மாத்திரம் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அதற்கு அவர் மக்கள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கே உண்டு என குறிப்பிட்டார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
