விஜயதாஸ ராஜபக்சவின் மகனை கைவிட்ட சட்டத்தரணிகள்! காப்பாற்றப்படுவாரா ரகித ராஜபக்ச..!
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ச சார்பாக நீதிமன்றத்தில் தாங்கள் முன்னிலையாக அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது குறித்து தகவல் தாக்கல் செய்ததாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என சுட்டிக்காட்டி, விசேட அறிக்கை ஒன்றை சங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தமது உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட இதுபோன்றதொரு சட்ட நடவடிக்கையின் போது, சங்கத்திற்குரிய பொறுப்பும் பங்கும் மிகவும் வரையறுக்கப்பட்ட ஒன்றாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பது மற்றும் அடுத்தகட்ட நிறுவன ரீதியான நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களைச் சங்கத்திற்கு அறிக்கையிடும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டது.
இதனை தவிர, வேறு எந்தவொரு நேரடி தலையீட்டையும் தங்கள் சங்கம் செய்வதில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் தகவல் சமர்ப்பிப்பதற்காக, தமது செயற்குழுவினால் எந்தவொரு சட்டத்தரணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
குற்றச்சாட்டில் கைது
மேலும் அதற்கான எந்த அதிகாரமும் அளிக்கப்படவோ இல்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணிக்காக முன்னிலையாவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச முறைகேடான முறையில் பாதாள உலகக்குழுவை சேர்ந்த உறுப்பினரை காப்பாற்ற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.