அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றம்! நம்பிக்கை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம்
புதிய இணைப்பு
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து ஜனாதிபதியுடன் வெற்றிகரமான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், அந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு முடிவில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, தொடர்புடைய முன்மொழிவு குறித்து ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
முதலாம் இணைப்பு
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
வெளியான வர்த்தமானி
அதன்படி, தொடர்புடைய இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் சட்டமூல திருத்தம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
மேலும், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் இவ்விடயம் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.
அதன்படி, இது தொடர்பான முன்மொழிவை விவாதிப்பதற்கு, இலங்கை சட்டத்தரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாய்ப்பளித்துள்ளார்.