யாழில் செயலிழந்த இலங்கை வங்கியின் தன்னியக்க இயந்திரம்: பிராந்திய முகாமையாளர் கருத்து
புதிய இணைப்பு
இலங்கை வங்கியின் சங்கானை கிளையில் உள்ள தன்னியக்க சேவை இயந்திரமானது நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியதையடுத்து இலங்கை வங்கியின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த இடையூறு தொடர்பாக அவர் விபரிக்கையில்,
“நாங்கள் மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதிலேயே எங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றோம்.
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு வழங்கப்பட்ட தொடர் விடுமுறைகளால், வங்கி செயற்பாடுகளில் சில இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம்.
இது போன்ற இடையூறுகளை உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த நாம் வங்கிக் கிளைகளில் தொலைபேசி இலக்கங்களை காட்சிபடுத்தியுள்ளோம்.
அத்துடன், சங்கானை கிளையில் இன்னொரு தன்னியக்க சேவை இயந்திரத்தை பொருத்தவும் இதுபோன்ற இடையூறுகளை இனிவரும் காலங்களில் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை வங்கியின் (Bank of Sri Lanka ) சங்கானை (Chankanai) கிளையில் உள்ள தன்னியக்க சேவை இயந்திரமானது நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த இயந்திரமானது சில வேளைகளில் இயங்கியும் இயங்காமலும் காணப்படும் நிலையில் இது குறித்து வாடிக்கையாளர்கள் பல தடவைகள் முகாமையாளருக்கு முறைப்பாடு செய்தும் பலன் கிட்டவில்லை என கூறியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் கோரிக்கை
இந்நிலையில் சங்கானை (Chankanai) கிளையில் தன்னியக்க இயந்திரம் செயற்படாததன் காரணமாக வாடிக்கையாளர்கள் அடுத்த கிளையின் தன்னியக்க சேவை இயந்திரத்தை பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இலங்கை வங்கி அரச வங்கியாக அமைந்துள்ள போதிலும் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை என்பதனால் விரைவில் குறித்த இயந்திரத்தினை திருத்தம் செய்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |