வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் வட்டி வீதத்தை சுமார் 2.5 வீதத்தால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாணயக் கொள்கை வீதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று காலை கொள்கை வீதங்களை தளர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகிய நாணயக் கொள்கை வீதங்களை தற்போதைய மட்டங்களில் இருந்து 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, புதிய நிலையான வைப்பு வசதி வீதம் 13ஆகவும் நிலையான கடன் வசதி வீதம் 14ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள முடிவு
பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைதல், அதன் அழுத்தங்கள் படிப்படியாக குறைதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை மேலும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப பண நிலைமைகளை தளர்த்தும் நோக்கில் மத்திய வங்கியின் நாணய வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த நிலையிலேயே, வர்த்தக வங்கிகளின் வட்டி வீதத்தை சுமார் 2.5 வீதத்தால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை மாத இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் ஒற்றை இலக்க மதிப்பிற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |