போக்குவரத்து அமைச்சரின் செயற்பாட்டால் ஏமாற்றமடைந்த யாழ்.அதிகாரிகள்(Photos)
யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தினை இன்று(21) போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வாகனத்தில் சென்றவாறே பார்வையிட்டுள்ளார்.
அமைச்சரின் வருகை
குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தன பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் வாகனத்தில் இருந்தவாறே பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஒருசில நொடிகளில் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக வந்திருந்த அதிகாரிகள் கூட அமைச்சர் சென்ற நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்தள்ளார்.
நெடுந்தூர பேருந்து நிலையம்
நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் சுமார் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையம், 2021 ஜனவரி மாதம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டபோதும் இதுவரையில் மக்கள் பாவனைக்கு வராத நிலையிலேயே காணப்படுகிறது.
இதனால் குறித்த பேருந்து நிலையம் பராமரிப்பற்ற இடமாக மாறி வருவதுடன் சமூகத்திற்கு பிறழ்வான நடத்தைகள் இடம்பெற்றுவருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
பேருந்து நிலையத்தை இயக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சித்த போதும்
இலங்கை போக்குவரத்து சபை அங்கிருந்து சேவையை மேற்கொள்ள மறுத்து வருவதால், அந்த
பேருந்து நிலையம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.