1500 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
SportsChain எனும் கணினி மென்பொருளை பயன்படுத்தி 1500 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி தொடர்பில் சீன நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது இரகசிய பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சீன தம்பதியான ஹியூமன் மேக்ஸ் மற்றும் காகி சங்கி ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டார்.
1.4 பில்லியன் பணம்
சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்த போது, 1.4 பில்லியன் ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது. இந்தப் பணம் எப்படி கணக்குகளுக்கு வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி ஹம்ஸ அபேரத்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்த சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஹம்ஸா அபேரத்ன, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதான சந்தேகநபரான ஷியாமலி கிர்தா பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரது தொலைபேசியில் அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்தி மூலம் இரண்டு சீன பிரஜைகளுடன் தொடர்பு இருந்தமை தெரியவந்தன.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றில் இதற்கு முன்னர் உண்மைகளை தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குற்ற செயல் அல்ல எனவும் டிஜிட்டல் நாணயத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு எனவும் இலங்கையில் விரைவில் இதனை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
70 முறைப்பாடுகள்
இலங்கையின் மிகப்பெரிய சீன முதலீட்டாளரின் மகனான இந்த சந்தேக நபர் அவ்வாறான தவறை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த குழுவினரிடம் இருந்து 800 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் ஸ்போர்ட் செயின் சொசைட்டி ஸ்ரீலங்கா என்ற நிறுவனத்தின் பிரதானிகள் 7 பேரின் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேலதிக நீதவான் அவர்களில் ஐந்து பேரின் வங்கி கணக்குகளை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.