இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்த குற்றவாளி கைது
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் 'எல்பா' எனப்படும் அவிஷ்கவின் இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் சென்ற 'பண்டாரகம அசேல' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, ரைகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வெளிநாட்டில் வசிக்கும் 'எல்பா'வின் போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் இந்த சந்தேகநபர் நேரடியாகத் தொடர்புடையவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டைச் சுற்றி வளைத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, பிளாஸ்டிக் குழாய் ஒன்றிற்குள் பதுக்கி வைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகப் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.