யாழில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிப்பதற்கு தடை
யாழ்ப்பாணம் (Jaffna) தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஆய்வுகள்
அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்போது, கண்ணிவெடிகள் காணப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தப் பகுதிகளை தவிர்த்து ஏனைய காணிகளுக்குள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் பொதுமக்கள் தங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்ணிவெடிகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை உரிய நடைமுறைகளை பின்பற்றி செயலிழக்கச் செய்யப்பட்டு அகற்றப்படவுள்ளன.
கண்ணிவெடி அற்ற பிரதேசம்
அதன் பின்னர் குறித்த பகுதிகள் கண்ணிவெடி அற்ற பிரதேசமாக அறிவித்தல் விடுக்கப்பட்டதும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி தங்களின் காணிகளுக்குள் செல்ல முடியும்.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கையின் நிமித்தம் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இராணுவ கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்ட இந்த
பகுதிக்கு பொதுமக்கள் இலகுவாக செல்லக்கூடிய வீதிகளும் வடக்கு மாகாண ஆளுநரின்
கோரிக்கைக்கு அமைய விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |