பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள்
யாழ். நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.
நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித்தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் , மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.
65.9 வீதமான வாக்களிப்பு
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 65.9 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெற்றதுடன் அஞ்சல் மூல வாக்களிப்பையும் கருத்திற்கொண்டு குறித்த வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மன்னார்
மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளது.
இன்று(21) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம்பெற்றது.
மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன்னார் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மத்திய நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக 72.33 வீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 65 ஆயிரத்து 535 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் முழுமையாக வாக்கு என்னும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - லம்பர்ட்
மட்டக்களப்பு
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று(21) மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் இடம்பெற்ற வாக்களிப்பின் வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் வாக்கெண்டும் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி - ருசாத்
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் இன்று(21) மாலை நான்கு மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 534 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையமான நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1748 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 04.00 மணி வரை வாக்களிப்பு சுமூகமாக இடம் பெற்றதோடு, 80% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - திருமாள்
அம்பாறை
அம்பாறை - திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது கொண்டுசெல்லப்பட்ட அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையாக வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்களிப்பானது 26775 பேர் வாக்களித்துள்ளதுடன் இது 99.99 வீதம் ஆகும்.தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 5 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கென மொத்தமாக 56 வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 14 தபால் மூலம் வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பவ்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - சிஹான் பாரூக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |