பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே - சபையில் ரவூப் ஹக்கீம் எம்.பி. முன்வைத்த கோரிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார் என்று பிரித்தானியாவின் 'செனல் 4' ஊடகம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அந்த ஊடகம் பொய் கூறுகின்றது என்று பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அப்போது மறுப்புத் தெரிவித்திருந்தது.
எனினும், செனல் 4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தெளிவான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாரதூரமான போர்க்குற்றம்..
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, அவர் இராணுவப் பதுங்கு குழி ஒன்றில் உணவுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒளிப்படம் முதலில் வெளிவந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர் மார்பில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடப்பது போன்ற அடுத்த ஒளிப்படம் வெளியானது. அவர் பிரபாகரனின் மகனாகவே இருந்தாலும், ஒரு சிறுவனுக்கு இவ்வாறு நடந்திருக்கக்கூடாது.
கடந்த கால வரலாறுகளை நாம் உற்றுநோக்க வேண்டும். ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்ட போது, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அப்போதைய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டனர்.
அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் உயிரிழந்த போதும், அவரது மனைவியும் மகளும் சட்டத்தினூடாகப் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைவரின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மட்டும் ஏன் படுகொலை செய்யப்பட வேண்டும்? எனவே, இந்த விவகாரத்தை ஒரு பாரதூரமான போர்க்குற்றமாகக் கருதி, முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri