பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இ.போ.ச பேருந்து: ஊடகவியலாளரை அச்சுறுத்திய சாரதி (Photos)
முல்லைத்தீவு ஏ9 வீதியில் பயணிக்கும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் நடவடிக்கைகளை தொடர்ச்சி முன்னெடுப்பதாக பொதுமக்களால் குற்றச்சுமத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குப்பட்ட பனிக்கன்குளம் மற்றும் கிழவன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இதனால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேருந்து சாரதிகளின் இச் செயற்பாடுகளுக்கு மாணவர்கள் பெற்றோர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளின் நடவடிக்கையினால் ஓரளவு முன்னேற்றகரமான செயற்பாடு இடம்பெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதிப்பு
அந்த வகையில் மாணவர்களை பருவகால சீட்டு பெற்றுக் கொண்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் மாத்திரமே பயணம் செய்ய முடிகிறது.
இவ்வாறான நிலையில் அண்மையில் குறித்த விடயம் நீதிமன்றிலும் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு மாணவர்களுக்கு உரிய சேவையை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து ஒன்று தொடர்ச்சியாக பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன்னதாக மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வருகைதந்து சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஆசிரியர்களை ஏற்றி செல்வதாகவும் மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும் மாணவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்
இந்நிலையில் கடந்த (02.11.2022)ஆம் திகதி மாணவர்களையும் பேருந்தில் ஏற்றுமாறு ஊடகவியலாளர் ஒருவர் கோரிய போது, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தாக பொலிஸ் நிலையத்தில் முறையிடுவோம் என தெரிவித்து ஊடகவியலாளரை பேருந்து சாரதி தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் போது பேருந்தில் பயணியாக வந்த இராணுவ வீரர் ஒருவரும் பேருந்தில் இருந்து இறங்கி தான் முகாமுக்கு செல்ல வேண்டும் உடனே பேருந்தை செல்ல விடுங்கள் என தெரிவித்துள்ளதோடு, பொலிஸாரை அழைத்து ஊடகவியலாளரை ஒப்படைக்குமாறு தெரிவித்து தனது தொலைபேசியில் புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
காத்திருந்து ஆசிரியர்களை ஏற்றி செல்லும் பேருந்து சாரதிகளுக்கு, ஏன் மாணவர்களை ஏற்றி செல்ல முடியவில்லை. நீதிமன்றம் வரை குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டும் இவ்வாறான பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மீது இலங்கை போக்குவரத்து சபை சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
