இரண்டு பேரின் உயிரை பலியெடுத்த பதுளை பேருந்து விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவெவ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்துள்ளார்.
பதுளை - மஹியங்கனை வீதியின் துன்ஹிந்த பகுதியில் கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் வரை காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் பரிசோதகர்கள் ஆய்வு
குறித்த பேருந்தின் சாரதி அல்விட்டிகல காலனியில் வசிக்கும் 41 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தை இதுவரை மோட்டார் பரிசோதகர்கள் ஆய்வு செய்யவில்லை எனவும் அறிக்கை கிடைத்த பின்னரே விபத்துக்கான காரணம் இயந்திரக் கோளாரா அல்லது சாரதியின் கவனக்குறைவா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளன.
காயமடைந்தவர்களின் நிலவரம்
இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பேரில் 13 பேர் நேற்று (4) வரை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது 27 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அவசர சிகிச்சைப்பிரிவின் தலைவர் டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |