கொழும்பில் பலத்த புயல் காற்றால் சேதமடைந்த வீடுகள்.. மாநகர சபை முன்னெத்த நடவடிக்கை
கொழும்பு - ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு கடந்த 22ஆம் திகதி பிரதி மேயரினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கொழும்பு மாநகரப் பகுதியில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்த நிலைமையினால், இப்பகுதியில் உள்ள 4 வீடுகளின் கூரைகள் முற்றாக இடிந்து விழுந்து சேதமடைந்திருந்தன. இதனால் அவ்வீடுகளில் வசித்து வந்த 8 குடும்பங்கள் தங்குமிட வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே, அப்பகுதியின் ஆபத்தான நிலைமையைக் கண்டறிந்து கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் வட கொழும்பு தொகுதி மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் ஆகியோர் மக்களை அந்த வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
நிதி ஒதுக்கீடு
இவர்களின் இந்த துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலை மற்றும் அவர்களின் வேண்டுகோள்களை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அவர் கொழும்பு மாநகர முதல்வர் (Mayor) மற்றும் பிரதி முதல்வர் (Deputy Mayor) ஆகியோருடன் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்ட செயலாளர் சந்துருவான் மற்றும் பிரதேச செயலகத்தின் நேரடித் தலையீட்டுடன், கொழும்பு மாநகர சபையினால் கூரைகளைப் புனரமைப்பதற்காக 20 இலட்சம் ரூபாய் (2 மில்லியன்) நிதி அவசரமாக ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிதியைக் கொண்டு அனைத்து வீடுகளினதும் கூரைகள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் மீளக் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan