குழந்தை இறந்த விவகாரம் - பெற்றோர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் குழந்தை ஒன்று பிறந்த அன்றே இறந்துள்ளதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
செல்வா வீதி, தொல்புரம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் இரத்தப்போக்கு கட்டுப்படாமையினால் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரைப் பார்வையிட்ட வைத்தியர்கள் "நீங்கள் கர்ப்பமாக இருந்தீர்களா? உங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளதா?" என வினவியுள்ளனர்.
அதற்குக் குறித்த பெண் தான் கர்ப்பம் தரிக்கவில்லை எனவும், குழந்தை பிறக்கவில்லை எனவும் கூறிய நிலையில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தான் குழந்தை பெற்றெடுத்த விடயத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
எனினும் குழந்தையைத் தூக்கும் போது கை நழுவி விழுந்து குழந்தை இறந்துள்ளதாகவும், குழந்தையின் பிரேதம் வீட்டில் தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
மருத்துவர்கள் குழந்தையின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து வருமாறு கூற, அப் பெண்ணின் மாமியார் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குழந்தையின் தலையில் அடி காயங்கள் உள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணையும், அவரது கணவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் தற்போது இந்தக் குழந்தை நான்காவதாகப் பிறந்துள்ளது.
மேலும், குறித்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக
அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.