உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவினால் நடைபவனியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி தலைமையில் "ஆம் எம்மால் காச நோயை இல்லாதொழிக்க முடியும்" எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (23.03.2024) இடம்பெற்றுள்ளது.
நோய்க்கான அறிகுறிகள்
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்த நடைபவனி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வரை சென்றதுடன் வைத்தியசாலையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றுள்ளது.
இதன்போது காசநோய் தொடர்பாகவும் அந்த நோய்க்கான அறிகுறிகள், நோயிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சமூகத்தில் காசநோயை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி, ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி, பாலியல் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி உள்ளிட்ட பிரிவு தலைவர்களும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி - பாறுக் ஷிகான்
வவுனியா
வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் வைத்தியசாலை பின் வீதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றதுடன், விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றுள்ளது.
இதில் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள் ஆகியோருடன் முச்சக்கர வண்டிகளும் விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக வலம்வந்துள்ளனர்.
செய்தி - வசந்தரூபன்