வடக்கு கிழக்கை மையப்படுத்தி செயற்படும் ஆவா குழு உறுப்பினர்கள் மட்டக்குளியில் கைது
அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பிரபல 'ஆவா' குழுவினர் இருவர் உட்பட நான்கு பேர், கொழும்பு மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் ஒன்றுக்கு ஆயத்தமாவது குறித்து தனி ஆள் ஒருவரிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேக நபர்கள் இருவரும் கிழக்கின் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், வடக்கு கிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 'ஆவா' குழுவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் அண்மையில் துபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்தநிலையில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு 'ஆவா' குழுவின் இந்த இரண்டு உறுப்பினர்களையும் அழைத்து வருமாறு துபாயில் வசிக்கும் ஒருவரினால் அனுப்பப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும், புதுக்குடியிருப்பு மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்தவர்களாவர். முன்னதாக, குறித்த இரண்டு ஆவா குழு உறுப்பினர்களும் துபாயில் இருப்பவரை டிக்டோக் மூலம் மிரட்டி தகவலும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர்களது தொலைபேசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், 'ஆவா' குழுவைச் சேர்ந்த இந்த இருவரையும் பெண் ஒருவர், மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அந்த தாக்கப்பட்ட காணொளி, துபாயில் உள்ளவருக்கு அனுப்புவதற்காக எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.