ஏமன் கடல் பகுதியைத் தவிர்க்கவும்! கப்பல்களுக்குக் கடும் எச்சரிக்கை
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஏமன் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கடல்சார் பாதுகாப்பு அமைப்பு கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று(28.3.2026)இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹவுதிகள், இனிவரும் நாட்களிலும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனச் சபதம் செய்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உலக வர்த்தகப் பாதையின் முக்கிய நுழைவாயிலான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை ஹவுதிகள் முடக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஆஸ்பைடஸ்' (Aspides) கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்கள், அச்சுறுத்தல் குறையும் வரை ஏமன் கடல் பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய நலன்களுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அளவு "மிக அதிகம்" (High) என்றும், அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்பில்லாத பிற கப்பல்களுக்கு "மிதமான" (Medium) அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அறிக்கை வகைப்படுத்தியுள்ளது.
ஏமனின் வடமேற்குப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள், கடல்வழிப் போக்குவரத்தை இலக்கு வைத்தால் அது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.