மோதல்களை தவிருங்கள்! அவசர நிலையை சமாளிக்க இரத்தம் இல்லை: வைத்தியர் லக்ஷ்மன் எச்சரிக்கை
இலங்கையின் இரத்த வங்கி என அழைக்கப்படும் தேசிய இரத்த மாற்றுச் சேவையில், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை உள்ளடக்கிய அவசர நிலைமையை சமாளிக்கும் வகையில் இரத்தம் இல்லை என இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்களிடம் மோதல்கள் போன்ற துரதிஷ்ட நிகழ்வைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசர நிலையை சமாளிக்க இரத்தம் இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தற்போது 9,500 அலகு இரத்தத்தை பராமரித்து வருகின்றோம், பாதுகாப்புப் படையினர் மற்றும் எதிர்ப்பாளர்கள், அவசரகால சூழ்நிலையைத் தவிர்க்க அமைதியான முறையில் செயல்படுங்கள்.
வன்முறை ஒன்று வெடித்து, இரத்தத்தின் தேவை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு மாத்திரமே இரத்த கையிருப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.
மக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
தலசீமியா, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினமும் சுமார் 1100 யூனிட் ரத்தம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே பொறுப்பற்ற முறையில் செயற்படும் போது இந்த நாட்டு மக்களுக்கு பாரிய பேரிடராக மாறும்” என தெரிவித்துள்ளார்.



