இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள முல்லைத்தீவின் மற்றுமொரு அடையாளம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை போரிற்கு பின்னர் இயங்காத நிலையில் தற்போது இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலையாக ஓடு,செங்கல் என்பன இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பல வாக்குறுதிகள்
அருகில் உள்ள கூழாமுறிப்பில் களிமண் எடுக்கப்பட்டு அங்கு உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் போரிற்கு பின்னர் அந்த தொழிற்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியலுக்காக பல அமைச்சின் கீழ் கொண்டு புனரமைப்பு செய்யப்படும் என பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இதன்பின்னர் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஓடுகள் விற்பனையாகி வந்துள்ளன.
ஆனால் அங்குள்ள இயந்திரங்கள் எவையும் செயற்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை இராணுவ சமூக சேவை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இராணுவ தொழிலாளர்கள் மற்றும் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தின் பங்களிப்புடன் பொதுமக்கள் நலனுக்காக கூழாமுறிப்பு ஓட்டுத்தொழிற்சாலை விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 27ஆம் திகதி இதனை இலங்கை இராணுவத்தளபதி சென்று பார்வையிட்டு இயங்குவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
குறித்த பகுதிக்கு இலங்கை இராணுவத்தளபதி செல்லவுள்ள நிலையில் ஓட்டுத்தொழிற்சாலையினை சூழ உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |