இலங்கையரொருவரின் குடியுரிமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முக்கிய தீர்மானம்
நிரந்தர குடியுரிமையை கோரி நடைப்பயணம் மேற்கொண்ட இலங்கையருக்கு நிரந்தர குடியுரிமையை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2008 ஆம் ஆண்டு இலங்கை அகதியாக அவுஸ்திரேலியா சென்ற நீல் பாரா என்ற இலங்கையரின் குடும்பத்திற்கே இவ்வாறு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நிரந்தர வதிவிடத்தை எதிர்பார்த்து நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1,000 கிலோமீட்டர் நடைப்பயணத்தை தொடங்கியிருந்தார்.
நிரந்தர குடியுரிமை
விக்டோரியா மாகாணத்தில் ஆரம்பமான அவரது நடைப்பயணத்தின் இறுதி இலக்காக, அவுஸ்திரேலிய பிரதமரை சந்திக்க முயற்சித்த நிலையில் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே, அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 09 வருடங்களாக வீசா இன்றி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த நீல் பாரா, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது.