சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான முதல் தடையை முறையாகப் பின்பற்றவில்லை என சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது அவுஸ்திரேலிய இணைய பாதுகாப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தத் தடை நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல சிறுவர்கள் இன்னும் கட்டுப்பாடுகளை மீறி கணக்குகளை வைத்திருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
"தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அரசாங்கம் திரட்டி வருகிறது. இதன் மூலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை வெல்ல முடியும்" என அவுஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
அபராதம்
சட்டத்தை முறையாகப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ஒரு விதிமீறலுக்கு அதிகபட்சமாக 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இணைய பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மேன் கிராண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
சிறுவர்கள் 16 வயதுக்கு மேல் எனத் தோன்றும் வரை மீண்டும் மீண்டும் வயதுச் சரிபார்ப்புத் தேர்வுகளை செய்ய அனுமதிக்கப்படுதல். கணக்குத் தொடங்கும்போது முறையான வயதுச் சரிபார்ப்பு இல்லாமல், வயதை மாற்ற முயற்சிக்கும்போது மட்டும் சோதனைகளை நடத்துதல்.
ஏற்கனவே 16 வயதுக்குக் குறைவானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களிடம் மீண்டும் புதிய வயதுச் சரிபார்ப்பைக் கோருதல்.
எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களால் ஏற்படும் உடல் உருவக் கேலி மற்றும் இணையத் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இதே போன்ற சட்டங்களைக் கொண்டுவர பல நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
சுமார் மூன்றில் ஒரு பங்கு பெற்றோர்கள், தடையின் பின்னரும் தங்கள் பிள்ளைகள் சமூக வலைத்தளக் கணக்குகளை வைத்திருப்பதாகவும், பெரும்பாலான தளங்கள் வயது குறித்துக் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.