ஆறு கோடி ரூபாவிற்கு வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது (Video)
ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் நுவரெலியா அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு(10.02.2023) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் சுருவத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு
குறித்த வீட்டினை சோதனை செய்த போது மிகவும் சூட்சுமமான முறையில் அரிசி
பாத்திரம் ஒன்றில் வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேகநபர், வலம்புரி சங்கை 6 கோடி
ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகின்றார் என இராணுவ புலனாய்வு பிரிவுக்கு
தகவல் கிடைத்துள்ளது.
விசேட அதிரடிப்படையினர் கைது
இதனையடுத்து விசேட அதிரடிப்படைக்கு இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டு சந்தேகநபரை கைது செய்வதற்கு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலம்புரி சங்கை வாங்குவதற்காக செல்லும் பாணியிலேயே சந்தேகநபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேகநபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்-திருமாள்