சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Video)
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்ட வளைவில் இந்த போராட்டம் இன்று (08.03.2023) இடம்பெற்றுள்ளது.
கறுப்பு தினமாக பிரகடனம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க வேண்டும்.
அத்துடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதனை பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்ட பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.
கண்ணீருடன் போராட்டம்
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது. இந்த அரசு.கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐநாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கும் நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும், உள்ளக பொறிமுறை எதுவும் வேண்டாம் சர்வதேச நீதி விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார் ? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? போன்ற கோசங்களை முன்வைத்து கண்ணீருடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இராணுவம், இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சர்வதேச மகளிர் தினமான இன்று ( 08.03.2023 ) பெண்களுக்கான உரிமை பாதுகாப்பினை வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் மகளிர் தினத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கோரிக்கை
'பெண்களுக்கான சிறுவர்களுக்கான வன்முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். பெண்கள் வன்முறைகளில் இருந்து மீட்க வேண்டும். ஒவ்வொரு பொது அமைப்புக்களிலும் பெண்களின் பிரதிநித்துவ பங்கேற்பு அதிகாரிக்க வேண்டும், பெண்கள் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கும் தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இன்றைய சர்வதேச மகளீர்தினத்தில் பெண்கள் ஒவ்வொரு அமைப்புக்களிலும் அரசியலிலும் தீர்மானம் எடுக்கும் துறைகளிலும் 5 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும். பெண்களுக்கான, சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.