அமெரிக்க வங்கி மீது தாக்குதல் முயற்சி: இருவர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள 'பேங்க் ஆஃப் அமெரிக்கா அலுவலகத்தின் மீது நடத்தவிருந்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சியை அந்நாட்டுப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று(29.3.2026)மேலும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகத் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தரணி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றுமுன்தினம்(28.3.2026)அதிகாலையில், பாரிஸின் 8ஆவது மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வங்கியின் வாசலில் வெடிபொருளை வைத்துப் பற்றவைக்க முயன்ற ஒரு சிறுவனைக் கைது செய்தனர்.
விசாரணை
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது மேலும் இருவர் பிடிபட்டுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், பிடிபட்ட நபர்கள் மசகு எண்ணெய் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கைவினை வெடிகுண்டை பயன்படுத்த முயன்றதாகத் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண வெடிபொருள் போலத் தெரிந்தாலும், அது வெடித்திருந்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும், இந்தத் தாக்குதல் முயற்சியின் பின்னணியில் ஈரானின் உளவு அமைப்புகள் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ப்ராக்ஸிகள் (Proxies) எனப்படும் கூலிப்படையினரை ஏவி இத்தகைய தாக்குதல்களை ஈரான் முன்னெடுப்பதாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் முயற்சிகள்
நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிற்குச் சொந்தமான இடங்களை இலக்கு வைத்து இதே போன்ற தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கும் அவற்றுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறினார்.

தற்போது பிடிபட்டவர்கள் வெறும் பணத்திற்காகச் செயல்படும் இடைத்தரகர்கள் போலத் தெரிவதாகவும், இந்தச் சதித்திட்டத்தின் உண்மையான மூளையாகச் செயல்பட்டவர்களைக் கண்டறிய பிரான்ஸின் உளவுத்துறை மற்றும் நீதித்துறை இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரான்ஸிலுள்ள ஈரான் தூதரகம் மறுத்து விட்டது.