யாழ். கல்வியற் கல்லூரியின் காணியை அடகு வைக்க முயற்சி: சித்தார்த்தன் ஆதங்கம்
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி, மக்கள் ஆணையுள்ள ஜனாதிபதி என்பது அல்ல பிரச்சனை. நாட்டினுடைய வளங்களை தேவையற்ற விதத்தில் விற்று நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவதை யார் செய்தாலும் அது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்றையதினம் (03.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு
மேலும் தெரிக்கையில்,
காணி அடகு வைத்தல்
“ஒருவர் இராஜினாமா செய்தால் அந்த இடைக்காலத்திற்கு கட்டாயமாக ஒருவர் இருக்க வேண்டும். அரசியல் அமைப்பானது அதற்கான இடத்தினை கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக அரச சொத்துகளை விற்பதை அவர் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.இலாபம் தரும் சொத்துக்களை எல்லாம் விற்பது என்பது மிகவும் ஒரு தவறான நடவடிக்கை. அவர் அதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
அது மாத்திரமல்ல நேற்றுமுன்தினம் (02.09.2023) ஒரு விடயத்தை அறிந்தேன். இந்த பாடசாலைகள், அரச சொத்துக்கள், அதாவது முக்கியமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் காணிகள் எல்லாம் அடகு வைப்பதற்கு முடியுமா என பரிசீலிப்பதாக. கோப்பாய் கல்வியற் கல்லூரியின் 206 பரப்புடைய எனது பரம்பரை காணியை, எனது தந்தையாரின் பெயரால் நான் தான் கொடுத்திருந்தேன்.
அதற்கு நான் உறுதியும் எழுதி கொடுத்துவிட்டேன். அவர்கள் அதனை தொலைத்துவிட்டு தற்போது தேடி எடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். நான் ஏன் என்று கேட்டதற்கு எனக்கு ஒரு வேடிக்கையான காரணம் சொல்லப்பட்டது.
அதாவது, இவற்றை எல்லாம் அடகு அல்லது ஈடு வைக்கலாமா என்று பார்ப்பதற்கு என்று எனக்கு சொல்லப்பட்டது. அரச சொத்துக்களை எல்லாம் அடகு வைப்பது, ஈடு வைப்பது, விற்பது இப்படியான ஒரு செயற்பாடு நடக்கும் என நான் கருதவில்லை.
அதிலும் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை எல்லாம் அடகு வைப்பது என்பது மிகவும் பிழையான விடயம். இங்கு நான் கேள்விப்பட்ட விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் இலங்கையை பொறுத்தவரை நடக்க முடியாத விடயம் இல்லை. நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவையெல்லாம் ஒரு நாட்டை குட்டிச் சுவராக்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




