மட்டக்களப்பில் பொலிஸாருடன் இடம்பெற்ற பெரும் கைகலப்பு: 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய பொலிஸார் முற்பட்டபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டு கசிப்பு வியாபாரியை கைது செய்யவிடாது தடுத்து தப்பியோட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புதோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 62 வயதுடைய நபரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து அங்கிருந்து கொண்டு செல்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிஸாரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சட்டவிரோத கசிப்பு வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக 15 பேர் கொண்ட குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தினையடுத்து பொலிஸார் அவர்களை காணொளி, படம் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பொலிஸாருடன் கைகலப்பு
இந்நிலையில் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பியோடிய போது கரடியனாறு பொலிஸார் அவரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்யவிடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam