ஒலிம்பிக் மைதானத்தில் நடாத்தபடவிருந்த தாக்குதல்: தடுத்து நிறுத்திய பிரெஞ்சு பொலிஸார்
பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் (Paris) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள காற்பந்து மைதானமொன்றின் மீது தீவிரவாத தாக்குதல் நடாத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த மைதானமான சென் எட்டியென் மைதானத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான உண்மை
மேலும், குறித்த இளைஞன் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தாக்குதலை நடாத்தத் தயாராகி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக சுமார் 20,000 இராணுவ வீரர்களும், 40,000 பொலிஸாரும், 2,000 வெளிநாட்டு இராணுவம் மற்றும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |