மதபோதகர் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவாளர்கள்
வவுனியாவில் நேற்று மாலை தாக்குதலுக்குள்ளாகிய மதபோதகர் மீது இன்று காலையும் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த அவர் வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த மதபோதகரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதற்கும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலின் போது மதபோதகர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகமும் முன்னெடுத்து வருகின்றதாகவும், என் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மதபோதகரான ( தனபாலசிங்கம் ஜெயரூபன் (வயது 44) மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வவுனியா - பூந்தோட்டம் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலய சபையின் மதபோதகர் வீட்டிற்கு நேற்று இரவு வேளையில் சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் எம்.பி திலீபனின் ஆதரவாளர்கள் எனக்கூறி சிலர் மதபோதகரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து மதபோதகர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
நேற்று மாலை வவுனியா பூந்தோட்டம் முதலாம் ஒழுங்கை மகாறம்பைக்குளம் வீதியிலுள்ள கிறிஸ்தவ ஆலய சபையின் மதபோதகரின் வீட்டிற்கு அருகிலுள்ள நபர் ஒருவருக்கும் ,மதபோதகருக்கும் இடையே அண்மைய சில நாட்களாக இடம்பெற்ற குடும்ப முரண்பாடுகள் நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டு கைகலப்பு ஏற்பட்டு அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
இதையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்பிற்கு 119 க்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் அங்கு பொலிசார் சென்ற ஒரு சில மணிநேரத்திற்குள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒன்பது பேருக்கு மேற்பட்டவர்கள் பொலிசார் முன்னிலையில் மதபோதகரை தள்ளிவிட்டு அவரது மனைவி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் .
எனினும் பொலிசார் அவர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு துணைபோனதாகவும் அவர்கள் மீது எவ்விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது பொலிசாருக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஈ.பி.டி.பி கட்சிக்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் குறித்து நேர்மையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை பொலிசார் உடன் மேற்கொள்ள வேண்டும். தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து மதபோதகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை நேற்று இரவு மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.



