ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்: எழும் கண்டனங்கள்
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
ஊடகவியலாளர் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொள்வது ஒரு நாட்டின் ஆட்சியாளர்களின் இயலாமையை காட்டுகின்றது எனவே சக்தி. சிரச ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த தாக்குதல் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சக்தி. சிரச ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 9 ம் திகதி இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு அருகில்
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருந்த
சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் ஏழுபேர் மீது பொலிஸார்
மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு மிலேச்சத்தனமான செயலாகும் ஊடக சுதந்திரத்தை முற்றாக மழுங்கடிக்கும் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது. ஒரு நாட்டின் நான்காவது தூண் ஊடகம் காணப்படுகின்றது.
இந்த ஊடகவியலாளர் மீது இந்த நாட்டில் தொடர்ச்சியாக படுகொலைகள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் சிரச, சக்தி ஊடகவியலாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாதுகாப்பு படையினரின் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாரபட்சமற்ற உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படவேண்டும்.
படையினரும் பொலிஸாரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் நன்கு அவதானம் செலுத்தி அவர்களது கடமைகளை தங்குதடையின்றி செய்வதற்கு வழிவகை செய்யவேண்டியது அவசியமாகும் என ஒன்றியத்தின் தலைவர் க.சரவணன், செயலாளர். எஸ்.துசியந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி: பவன்
முல்லைத்தீவு ஊடக அமையம்
பொதுமக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்பில் அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிதை வன்மையாக கண்டிப்பதாக முல்லைத்தீவு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கடந்த 9ஆம் திகதி அன்று பாரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டத்தினை மேற்கொண்ட நிலையில் மக்கள் ஜனாதிபதி மாளிகையினை தம்வசப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அன்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மாளிகைக்கு முன்னால் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் பலர் கொடூரமான முறையில் பொலிஸாராலும்,விசேட அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள்.
ஊடக வியலாளர்கள் மீதான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை பாதுகாப்பு தரப்பினராலும் அரச ஆதரவு குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி அதன் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்தோடு மக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்பில் அறிக்கையிட சென்ற வேளை தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள சகோதர ஊடகவியலார்களுக்கு இந்த நேரத்தில் வடக்கிலிருந்து நாம் எமது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
இலங்கை நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செய்தி அறிக்கையிடல் செயற்பாட்டிற்கு ஆட்சியில் வரும் அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம் கடந்த காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் வலுக்கட்டாயமாக கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுவுள்ளனர்.
அரசாங்கத்தின் ஊழல்கள் பிழைகள் அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் என்பவற்றின் உண்மைகளை அறிக்கையிடும் போதே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
வடக்கு கிழக்கில் இவ்வாறான அறிக்கையிடல்கள் மனித உரிமை செயற்ப்பாடுகளை முன்னெடுத்த ஊடகவியலாளர் தொடர்ந்து தாக்கப்பட்டும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெற்கில் அது விஸ்பரூபம் எடுத்துள்ளது இந்த சம்பவங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது.
அரசின் ஊது குழலாக அன்றி அரசினது ஊழல் செயற்பாடுகள் அரசுக்கெதிரான போராட்டங்கள் போன்றவற்றின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் உங்கள் மீது தாக்குதல் நடக்கும் என்று.அரசு உணர்த்த முற்படுகிறது.
இலங்கையில் கடந்த காலங்களிலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ,அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அதற்கான சரியான நீதி விசாரணைகள் உரிய தரப்பினால் முன்னெடுக்கப்படாமையே இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் நிலைக்கு காரணமாக இருந்து வருகிறது.
முல்லைத்தீவு ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு தரப்பினராலும் அரச ஆதரவு குழுக்களினாலும் காலத்திற்குக்காலம் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர்கள் என்ற வகையில் இந்த வலியை நாம் நன்கு அறிவோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தப்பித்து விடுகின்றனர்.
இதற்கு சரியான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீது அரச பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்டுவரும் சாவு மணியாகும்.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டிய தேவையை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு விளைவிக்கும், அச்சுறுத்தல் மேற்கொள்ளும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அரச பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான தொடர் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரிய தரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
செய்தி; மோகன், கீதன்
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்
நிராயுத பாணியாக, ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடாகும் என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டணம் வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் மக்கள் பஞ்சம், பசி, பட்டினியுடன் வாழ்கின்ற பெரும் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்கள் நாட்டு நடப்புகளையும், தகவல்களையும் அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதற்கு ஊடகங்கள் அர்ப்பணிப்பான தங்களது பணியை ஆற்றி வருகின்றன.
அந்த வகையில் மக்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் உரிமைக்கு மதிப்பளித்துவரும் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், லஞ்சம் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடாகும்.
இந்நிலையில் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள மக்கள் அரச தலைவர்களின் வாசஸ்தலங்களை நாடி நீதி கேட்கும்போது அதனை தௌ்ளத் தெளிவாக அறிக்கையிடுவதற்காக ஒளிப்பதிவுக் கருவிகளுடன் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது ஆயுதம் தரித்த படையினர் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதும், வேதனைக்குரியதுமாகும்.
ஆயுதம் தாங்கிய படையினர் முன்னே மக்கள் செல்லும் காட்சியை ஒளிப்பதிவு செய்தமையை ஏற்க மறுத்து படையினர் கண்மூடித்தனமான முறையில் ஊடகவியலாளர்களை தாக்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நிராயுத பாணியாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். சுதந்திர இலங்கையிலே ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு உரிமை உள்ளது.
ஊடகக் கடமையினை சுதந்திரமாக மேற்கொள்வதை தடுத்து ஊடகவியலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்துவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இலங்கையில் இதுவரை காலமும் அவ்வப்போது ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கொலை சம்பவங்களும். காணாமலாக்கப்பட்ட சம்பவங்களும், பதிவாகியுள்ளன. இவற்றுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் போராடிக் கொண்டு தொடர்ந்து தமது கடமையினை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்கதையாக தாக்குதல்கள் மேற்கொள்வதை உடன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது கைவரிசையைக் காட்டுபவர்களுக்கு முதலில் அடிப்படை உரிமைச் சட்டம் தொடல்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும், பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. ஊடகவியலாளர்கள் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்ற அதே நேரத்தில், தங்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்தில் இது தொடர்ந்து கொண்டே செல்கின்றன. எனவே கொழும்பில் வைத்து தாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும்.
அதற்கு அரசாங்கம் உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தராதரம் பாராது தாக்குதல்தாரிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி பாதிக்கப்பட் ஊடகவியலாளர்களுக்கு நீதியையும். இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: ருசாத்



