கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதல் ஓர் இழிச்செயல், அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் - மக்கள் சிந்தனைக்களம்
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஓர் இழிச்செயல், அதனை வன்மையாக கண்டிப்பதாக கிளிநொச்சி மக்கள் சிந்தனைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது அலுவலகத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து மக்கள் சிந்தனைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தமது சேவைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு சமூக மட்டத்திலான ஒத்துழைப்புக்களும் விமர்சனங்களும் அத்தியாவசியமானவை.
அவர்களின் பணி மக்கள் திரள் ஊடாக நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையப் பாதுகாப்பான பணிச்சூழல் முக்கியமானதாகும். மாறாக அவர்கள் மீதான எந்த வன்முறைத் தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கன.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு கி.கமலராஜன் மீது ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட இழிச்செயலாகும்.
அளிக்கப்பட வேண்டிய சேவைகள் தொடர்பில் குறைபாடுகள் விமர்சனங்கள் காணப்படின் அவை அங்கீகரிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், விண்ணப்பங்கள் மூலமாக முன் வைக்கப்பட்டுத் தீர்வு பெறப்பட வேண்டும்.
மாறாகத் தனிநபர் மீதான நிறுவனம் மீதான தாக்குதலாக அவை உருமாற்றப்படுதல் பகிரங்க அதிகார சபைகளின் செயற்பாடுகளை அச்சுறுத்துவதுடன், முடக்க நிலைக்கு இட்டுச் செல்லவே வழிவகுக்கும்.
மாணவர் மையக் கல்வி விருத்தியைப் பிரதான இலக்காகக் கொண்ட கல்விச் சமூகத்தின் பணியாட் தொகுதிக்குள்ளே நிகழ்ந்த அநாகரிகமான இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதுடன், இது பூரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தாக்குதலாளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
கடந்த சில ஆண்டுகளாகக் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றனர்.
அவற்றை மேற்கொண்டவர்கள் மீது தீர்மானகரமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியமையின் தொடர்ச்சியாகவே வலயக் கல்விப் பணிப்பாளரையும் தாக்கும் அளவுக்கு வன்முறை வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கடப்பாடுடைய மாகாணத்தின் உயர்
அதிகாரிகள் தமது தீர்மானங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அறிவிக்க
வேண்டும் என்பதுடன், கல்வி உள்ளிட்ட அரச சேவைகள் யாவும் வினைத்திறனுடன்
செயற்பட மனித நேயம் மிக்க அணுகுமுறைகளை மேலும் வளர்த்தெடுக்க அனைவரும்
உழைத்தல் அவசியமாகும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.